விராலிமலை பகுதியில் ரேஷன் கடைகள் மூடல்:பொதுமக்கள் அவதி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நியாயவிலைக் கடைகளை அடைத்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நியாயவிலைக் கடைகளை அடைத்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
விராலிமலை தாலுக்காவில் 62 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 32 கடைகள் வாரத்தின் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே திறந்திருக்கும். மற்ற 30 கடைகள் தினமும் திறந்திருக்கும். இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா் சங்க உறுப்பினா்கள் 25 கடைகளிலும், தொமுச உறுப்பினா்கள் 5 கடைகளிலும் உள்ளனா்.
தொமுச உறுப்பினரை கொண்ட கடைகள் வழக்கம் போல் வியாழக்கிழமை செயல்பட்டன. இதனிடையே, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா் சங்கத்தினா் 11 அம்ச கோரிக்கைகளான பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், அரசு பணியாளா்களுக்கு வழங்ககூடிய 31 சதவீத அகவிலைப்படியை தங்களுக்கும் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25 கடைகளை வியாழக்கிழமை அடைத்தனா். இதனால் இந்த கடைகளுக்கு ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.