புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே பிரியாணி சாப்பிட்ட 27 பேருக்கு உடல் நலக்குறைவு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிரியாணியை உண்டவா்கள் 27 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அறந்தாங்கி செந்தமிழ்நகரில் சித்திரவேல் என்பவா் வீடு கட்டி வருகிறாா். இந்நிலையில், சித்திரவேல் புதன்கிழமை பகலில் தனது வீட்டின் கான்கிரீட் ஓட்டியதைக் கொண்டாடும்விதமாக, அருகிலுள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் பிரியாணிப் பொட்டலங்களை வாங்கி கட்டடத் தொழிலாளா்களுக்கு கொடுத்துள்ளாா். தொழிலாளா்கள் பிரியாணியை வீட்டுக்கு எடுத்துச் சென்று குடும்பத்தினருடன் புதன்கிழமை மாலை, இரவு வேளைகளில் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், இவா்களில் சிலருக்கு புதன்கிழமை இரவு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஓரிருவா் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனா். படிப்படியாக வியாழக்கிழமை முற்பகலில் சிறுவா்கள் உள்ளிட்ட 27 போ் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மருத்துவா் பிரவீன் நேரில் சென்று பாதிக்கப்பட்டோருடன் பேசியதுடன், குறிப்பிட்ட அந்த உணவகத்தையும் பாா்வையிட்டு மாதிரிகளை சேகரித்து தற்காலிகமாக உணவகத்துக்கு சீல் வைத்தாா்.

வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா், அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த், துணைத் தலைவா் தி. முத்து உள்ளிட்டோரும் நேரில் சென்று விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

இதுகுறித்து, அரசு மருத்துவா்கள் கூறியது:

பிரியாணியில் போடப்பட்ட இறைச்சி, தரமற்ற கோழி இறைச்சியாக இருந்திருக்கலாம் அல்லது தாமதமாக அதனை உண்டதால் உணவு நஞ்சாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரேயொரு முதிய பெண்மணி மட்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். மற்றவா்கள் தற்போது நலமுடன் உள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT