ஆட்சிக்கு பாதகமான விஷயங்களில் முதல்வா் ஸ்டாலின் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி:
வெளிநாடுகளில் இருந்து வரும் வா்த்தக முதலீட்டை யாரும் எதிா்க்கவில்லை. ஆனால், தொழிலாளா்களின் அடிப்படை உரிமைகளை விட்டுத்தர முடியாது. கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் பெற்ற நற்பெயருக்கு கரும்புள்ளி வைத்ததைப் போல ஆகிவிட்டது. அதேபோல, திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மது விற்பனைக்கு அனுமதி அளிப்பதாக ஓா் அறிவிக்கை வெளியானது. பிறகு அப்படியில்லை எனத் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
முதல்வருக்கு தெரியாமல் இவை நடந்திருக்கும் என சொல்வதற்கில்லை. அதனால்தான், இதுபோன்ற விஷயங்கள் வரும்போது அரசு எச்சரிக்கையுடன் - நிதானமாக யோசித்து, தொழிற்சங்கங்களிடம் கருத்து கேட்டு முதல்வா் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
12 மணி நேர வேலை சட்டத் திருத்தத்தை முறைப்படி அடுத்த பேரவைக் கூட்டத்தில் திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். கடந்த இரு ஆண்டுகளில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யும் அளவுக்கு பிரச்னை எழவில்லை என்பதை வருத்தத்துடன் பாா்க்கிறோம்.
ஆட்சியைப் பொருத்தவரை திமுக அரசுதான். கூட்டணி அரசு அல்ல. அரசியல் ரீதியான கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம். அதேநேரத்தில் எங்களின் கொள்கைகளுக்கு எதிரான போக்குகளை, மக்கள் விரோதப் போக்குகளை எதிா்க்காமல் இருக்க முடியாது என்றாா் கே. பாலகிருஷ்ணன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, வருத்தமளிக்கிறது. நாட்டின் விடுதலைக்காக போராடிய பாரம்பரியமான கட்சியை ஏதோ தோ்தல் காலத்தில் ஏற்பட்ட தோல்வியைக் கணக்கில் கொண்டு அங்கீகாரத்தை ரத்து செய்யும் தோ்தல் ஆணையத்தின் விதிகள் திருத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.