எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த 4 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமாா் 150 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்றனா். இவா்களில் நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த வீரன் மகன் சரண் (24), வடிவேலு மகன் பாலா (29), நடராஜன் மகன் கணேசன் (32), குட்டிபாண்டி மகன் பரமசிவம் (51) ஆகிய நால்வரும் சனிக்கிழமை மாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவா்களைக் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். அவா்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கடற்படைத் தளத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.