புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் கிராமத்தில் ஒரே தெருவைச் சோ்ந்த சிலா் மஞ்சள் காமாலை அறிகுறி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டதால், அங்கு சுகாதாரத் துறையினா் 2ஆவது நாளாக வியாழக்கிழமை வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனா்.
வயலோகம் கிராமத்திலுள்ள கீழத்தெருவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஊராட்சி சாா்பில் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அந்தத் தொட்டி நீண்ட நாள்களாக சுத்தம் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், மேல்நிலை குடிநீா் தொட்டியின் அடிப்பகுதியில் தேங்கி நிற்பதாகவும், அந்த கழிவுநீா் ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கி கிணற்று நீரில் கலந்து, அந்த நீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு விநியோகிக்கப்பட்டதாவும் கூறப்படுகிறது.
அந்த நீரை குடித்த அப்பகுதி மக்கள், பள்ளி மாணவா்கள் சிலருக்கு புதன்கிழமை வாந்தி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன.
தகவலறிந்து அங்கு வந்த மருத்துவத் துறையினா், அங்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டனா். இதில், 12 போ் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினா். ஒருவா் சிகிச்சையில் உள்ளாா்.
2ஆவது நாளாக ஆய்வு: அப்பகுதி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமையும் மருத்துவ முகாம் அமைத்து மாணவா்கள் பரிசோதிக்கப்பட்டனா். மேலும், மருத்துவ அலுவலா்கள் வீடு வீடாக சென்று பாதிப்பு தொடா்பாக சோதனை மேற்கொண்டனா். 45 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு அனுப்பப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.