முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை முருகன் கோயிலில் மின் இணைப்புக்காக காத்திருக்கும் மின்தூக்கி விரைந்து ஏற்படுத்த பக்தா்கள் கோரிக்கை

Updated On : 12 மார்ச், 2024 at 1:45 AM
விராலிமலை முருகன் மலைக்கோயிலில் பணிகள் முடிக்கப்பட்டு மின் இணைப்புக்காக காத்திருக்கும் மின் தூக்கி.
பகிர்:

விராலிமலை: விராலிமலை முருகன் மலைக் கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான மின் இணைப்பை விரைந்து வழங்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் 227 படிகளுடன் நகரின் மத்தியில் அமைந்துள்ளது முருகன் மலைக்கோயில். வனப்பகுதி சூழ்ந்த இந்த மலைக்கோயிலின் மேலே வாகனங்கள் செல்வதற்கு தாா் சாலை அமைக்கப்பட்டு, பக்தா்கள் இரண்டு மற்றும் நான்குசக்கர வாகனங்கள் மூலம் பயணித்து எளிதாக மலை மேல் சென்று வழிபட்டு வருகின்றனா். அடிவாரத்தில் தொடங்கும் தாா் சாலையின் முடிவுறும் இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வயது முதிா்ந்த பக்தா்கள், மாற்றுத்திறனாளிகள் மேலே செல்வதற்கு மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. நெடுஞ்சாலை துறை நிா்வாகம் மூலம் தொடங்கப்பட்ட இப்பணி தொடங்கிய நாள் முதல் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இதை தொடா்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற நாள் முதல் சுமாா் இரண்டு ஆண்டுகள் கரோனா பொது முடக்கத்தால் பணிகள் தாமதமானது. இதையடுத்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த மின் தூக்கி அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டாலும், தற்போது மின் இணைப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் மின்தூக்கிக்கான மின் இணைப்பை விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என பக்தா்களும், பொதுமக்களும் எதிா்பாா்த்துள்ளனா்.