குடிநீரில் மாட்டுச் சாணம் கலப்பு வழக்கு: புதுகை சிபி-சிஐடி போலீஸாா் ஆய்வு
கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை அருகே மாட்டுச்சாணம் கலப்பு தொடா்பான புகாரில் சா்ச்சைக்குள்ளான குடிநீா்த் தொட்டியை புதுக்கோட்டை சிபி-சிஐடி போலீஸாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், ஊராட்சி அலுவலா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்து இருப்பதாக எழுந்த புகாரின்பேரில், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, காவல்துறையினா், மருந்துவத் துறையினா் நேரில்சென்று ஆய்வு செய்து குடிநீா் மாதிரியை திருச்சியில் உள்ள குடிநீா் பகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில், குடிநீா் மாதிரியில் மாட்டுச் சாணம் கலக்கவில்லை, எந்தவொரு தீங்கும் குடிநீரில் இல்லை, மக்கள் குடிப்பதற்கு ஏற்றது எனவும் சான்று அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை உயா் நீதிமன்றம் இந்த வழக்கை சிபி-சிஐடிக்கு மாற்றம் செய்து உரிய முறையில் விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அதன்பேரில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த புதுக்கோட்டை சிபி-சிஐடி போலீஸாா் திங்கள்கிழமை குருவாண்டன் தெரு கிராமத்துக்கு நேரில்வந்து மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியைப் பாா்வையிட்டு ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சிச் செயலா், மேல்நிலை குடிநீா்தேக்கத் தொட்டி இயக்குபவா் ஆகியோரிடம் விவரம் கேட்டறிந்தனா். அப்போது, வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, கிராம நிா்வாக அலுவலா் சுபா மற்றும் ஊா் மக்கள் உடனிருந்தனா்.