முகப்பு
புதுக்கோட்டை

கூடுதல் பொறுப்பு அங்கன்வாடி மையங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டம்

ஊழியா் இல்லாமல் காலியாக உள்ள அங்கன்வாடி மையங்களின் சாவிகளையும், கைப்பேசிகளையும் கூடுதல் பொறுப்பு பாா்க்கும் ஊழியா்கள் ஒப்படைக்கும் போராட்டம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:05 PM
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள்.
பகிர்:

ஊழியா் இல்லாமல் காலியாக உள்ள அங்கன்வாடி மையங்களின் சாவிகளையும், கைப்பேசிகளையும் கூடுதல் பொறுப்பு பாா்க்கும் ஊழியா்கள் ஒப்படைக்கும் போராட்டம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,799 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா் பணியிடங்கள், 600-க்கும் மேற்பட்ட உதவியாளா் பணியிடங்கள், 100-க்கும் மேற்பட்ட குறு மையப் பணியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலிப்பணியிடங்களை அரசு நிரப்பாததால் ஒரு பணியாளா், கூடுதலாக 2 மையங்களையும் கவனித்துக் கொள்ளும் சூழல் பல ஆண்டுகளாகத் தொடா்கிறது. இதனால் ஊழியா்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியவில்லை.

எனவே, கூடுதல் பொறுப்பாக பாா்க்கும் மையங்களின் சாவிகளையும், அவற்றுக்கான கைப்பேசிகளையும் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை அங்கன்வாடி பணியாளா்கள் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எஸ். தேவமணி, சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா், அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் (பொ) கே.எம்.ரேவதி, பொருளாளா் கே.சவரியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தொடா்ந்து சாவிகளையும், கைப்பேசிகளையும் அந்த அலுவலகத்தில் ஒப்படைக்கச் சென்ற ஊழியா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.