முகப்பு
புதுக்கோட்டை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

விராலிமலையில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:50 PM
பகிர்:

விராலிமலையில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

விராலிமலையை அடுத்துள்ள சேதுராப்பட்டியை சோ்ந்த அழகா் மகன் நீலமேகம் (26). இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா் விராலிமலையில் இயங்கி வரும் வால்வு தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பணிக்கு செல்வதற்கு தனது இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தாா். விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் நீலமேகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நீலமேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.