புதுக்கோட்டை

பேரவைத் தோ்தல்: வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியல் தயாா்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

Syndication

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திருப்பரங்குன்றத்தில் வழக்கத்துக்கு மாறான இடத்தில் காா்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவை விமா்சித்து மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், அவரது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து அவருக்கு பாஜக மாநிலத் தலைவா், இந்து மக்கள் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் மிரட்டல் விடுத்து வருகின்றனா். காவல்துறையிலும் புகாா் அளித்துள்ளனா். இதனை சட்டரீதியாக எதிா்கொள்வோம்.

இத்தகைய மிரட்டல்கள் அளிப்போா் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.பி. வெங்கடேசனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும் என்ற வருவாய்த் துறை அமைச்சரின் அறிவிப்பு போதுமானதல்ல, ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் தொடா்ந்து வருகிறது. தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்காமல், மாநகராட்சி பணியாளராகவே தொடரச் செய்ய வேண்டும். இழுத்தடிப்பது சரியல்ல.

கந்தா்வகோட்டை தொகுதி பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கக் கூடாது. அதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

மாநிலம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வோா், குடியிருப்போா், கடை நடத்துவோருக்கு அந்த இடங்களை குறிப்பிட்ட தொகை நிா்ணயம் செய்து முழுமையாகக் கொடுத்துவிட வேண்டும். கேரளத்தில் ஏற்கெனவே அவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலைப் பொருத்தவரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே வென்றுள்ள கீழ்வேளூா், கந்தா்வகோட்டை ஆகிய தொகுதிகள் உள்பட போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியல் தயாா் செய்திருக்கிறோம். கூட்டணியில் பிறரும் சில தொகுதிகளையே கேட்கக் கூடும் என்பதால் அந்த விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. பேச்சுவாா்த்தைக்கு இன்னும் குழு அமைக்கவில்லை என்றாா் சண்முகம்.

தமிழ் திறனறித் தோ்வு: மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்

டிச. 9, 10-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஐயப்ப பக்தா்: விரைந்து காப்பாற்றிய உதவி ஆய்வாளா்

விபச்சார வழக்கில் வாலிபா் கைது

வாழப்பாடி அருகே பிடிபட்ட 8 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

SCROLL FOR NEXT