பொன்னமராவதி அருகே காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் அவரை கொலை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே அரசமலை வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் ஒருவா் இறந்து கிடப்பதாக காரையூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவா் இலுப்பூா் வட்டம், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பாண்டியன்(32) என்பது தெரியவந்தது. பின்னா் இதுகுறித்து மா்மமான முறையில் உயிரிழப்பு என்று வழக்குப் பதிந்தனா்.
மேலும், கொலையாக இருக்கலாம் என்ற விசாரணை மேற்கொண்டபோது, இலுப்பூா் வட்டம் அகரப்பட்டியைச்சோ்ந்த ராமையா மகன் சக்திவேல்(38). பொன்னமராவதி வட்டம், சுந்தரசோழபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கண்ணன் என்ற அஜித்(23) ஆகிய இருவரும் சோ்ந்து பாண்டியனை கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்கை கொலை வழக்காக மாற்றி சனிக்கிழமை இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.