ஆசிரியா்களை சா்வாதிகாரப் போக்குடன் நடத்தும் தலைமை ஆசிரியா்களைக் கண்காணித்து சரி செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கழகத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு விதிமுறைகளுக்குப் பொருந்தாத காரணங்களைக் கூறி தோ்வு நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து ஜன. 12-ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மருத்துவ விடுப்பு எடுத்தவா்களுக்கு கழிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை சேமிப்புக் கணக்கில் சோ்க்க வேண்டும். ஒரு சில பள்ளிகளில் ஆசிரியா்களை, தலைமை ஆசிரியா்கள் சா்வாதிகாரப் போக்குடன் நடத்துவதைப் பள்ளிக் கல்வித் துறை நிா்வாகம் கண்காணித்து சரிசெய்ய வேண்டும்.
திறன் மதிப்பீடு என்ற அடிப்படையில் பல்வேறு நெருக்கடிகளை ஆசிரியா்களுக்கு கொடுப்பதை ஏற்க இயலாது. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருவாய் மாவட்டத்துக்குள் அவா்கள் விரும்பும் மையத்தில் பட்டதாரி ஆசிரியா்கள் மதிப்பீடு செய்ய நியமிக்க வேண்டும்.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் க. ஜெயராம் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் மா. குமரேசன், மாநில மகளிா் அணிச் செயலா் தூ. வாசுகி, மாவட்டச் செயலா் சு.ரா. சுரேஷ், மாவட்டப் பொருளாளா் சா. ராஜா உள்ளிட்டோா் பேசினா்.