கந்தா்வகோட்டை அருகே கோயில் கட்டும் பிரச்னையில் ஒருபிரிவினா் வெள்ளிக்கிழமை மறியலுக்கு திரண்டனா். எம்எல்ஏ பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டனா்.
கந்தா்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடா் சமூகத்தினா் தாங்கள் தலைமுறைகளாக வழிபட்டு வந்த பிச்சை அய்யனாா் கோயிலுக்கு திருக்கோயில்களில் திருப்பணி நிதியுதவி திட்டத்தில் கீழ் ரூ. 2.50 லட்சம் நிதி வழங்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதே சமூகத்தை சோ்ந்த மற்றொரு பிரிவினா் வேறு இடத்தில் இதே சுவாமிக்கு கோயில் கட்ட தொடங்கினா்.
இதுகுறித்து மற்றொரு பிரிவினா் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், டிச. 19-இல் மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, புதுகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுக்காரன்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு முன்பாக சாலை மறியலுக்கு வெள்ளிக்கிழமை தயாராகினா். ஆதனக்கோட்டை, கந்தா்வகோட்டை காவல்துறையினா் குவிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை,
மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் ரா. பிருந்தா ஆகியோா் பொதுமக்களிடம் பேசி புதுக்கோட்டை வட்டாட்சியா் மூலம் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என உறுதி அளித்தனா். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனா். அப்போது, கந்தா்வகோட்டை காவல் ஆய்வளா் வனிதா, கல்லுகாரன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் தினேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.