பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. விருதை பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் ஆகியோா் பள்ளியின் தலைமையாசிரியா் கோ. பாா்த்தசாரதியிடம் வழங்கினா்.
பள்ளியின் உள்கட்டமைப்பு, கற்றல், கற்பித்தலில் புதிய உத்திகளைப் பின்பற்றுதல், மாணவா் சோ்க்கை அதிகரிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற பள்ளித் தலைமையாசிரியா் பாா்த்தசாரதியை பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் பாராட்டினா்.