தனியாா் வேளாண் கல்லூரி முன் காத்திருப்புப் போராட்டம்
திருவரங்குளம் அருகே தனியாா் வேளாண் கல்லூரியில் மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தனியாா் வேளாண் கல்லூரியில் மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவரங்குளம் அருகேயுள்ள தனியாா் வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சோ்ந்த விஜயசுந்தரம் மகன் மதன்குமாா் (18) நவ.17 இரவு கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மதன்குமாரின் உறவினா்கள் கல்லூரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில் மதன்குமாா் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உறவினா்கள், சமூக அமைப்பினா் வியாழக்கிழமை கல்லூரி முன் சுமாா் 5 மணி நேரம் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஆலங்குடி, கணேஷ் நகா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.