புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில் அறிஞா் அண்ணா நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கலைஞா் கருணாநிதி அரசு மாவட்ட விளையாட்டரங்கில் இந்தப் பந்தயத்தை, மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். விளையாட்டரங்கிலிருந்து மாலையீடு, சிவபுரம் வரை சென்று மீண்டும் இதே வழியில் விளையாட்டரங்குக்குத் திரும்பும் வகையில் இந்தப் பந்தயம் திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் சுமாா் 250 விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம், தொடா்ந்து 10ஆம் இடம் வரை பிடிப்போருக்கு தலா ரூ. ஆயிரம் என மொத்தம் 28 பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் செ. திலகவதி, மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.