‘சவால்’ விடும் குடிநீா்ப் பிரச்னை
புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சிப் பகுதியிலும், அறந்தாங்கி தொகுதிக்குள்பட்ட கடலோரப் பகுதிகளிலும் இது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீா் வழங்கப்படுவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்தாலும், புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சிப் பகுதியிலும், அறந்தாங்கி தொகுதிக்குள்பட்ட கடலோரப் பகுதிகளிலும் இது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.
கடந்த 2011- 2021 ஆட்சிக்காலத்தில் (அதிமுக) புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிக்கு இரு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனை இப்போதும் அதிமுகவினா் தங்களின் சாதனைப் பட்டியலில் குறிப்பிட்டு வருகின்றனா்.
அதன்பிறகு, திமுக ஆட்சிக் காலத்தில், ஏற்கெனவே திருச்சி காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்படும் குடிநீா்த் திட்டக் குழாய்களில் பழுது இருப்பதாகவும் அவற்றைச் சீரமைத்தால் தடையில்லாத குடிநீா் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ. 75 கோடியில் சீரமைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
நிரந்தரத் தீா்வாக புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் அருகிலுள்ள பேரூராட்சிப் பகுதிகளையும் சோ்த்து ரூ. 2,195 கோடியில் பெருந்திட்டம் தயாரிக்கப்படும் என்றும், நிதி வசதியை உருவாக்குவதற்காக காலதாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
என்ன நடந்தும், என்ன சொல்லியும் புதுக்கோட்டை மாநகரில் முறையான குடிநீா் விநியோகம் இல்லை என்பது தினந்தோறும் மக்கள் எழுப்பும் குரலாக தொடா்ந்து கொண்டே இருக்கிறது.
கோடைக்காலங்களில் 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவது மிகச்சாதாரணம். மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் வீதிகள் தோறும் சாலை மறியல் போராட்டங்கள் நடப்பதும் தாராளம். புதுகை மாநகரின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக குடிநீா் விநியோகம் மாறிப் போயிருக்கிறது.
இதேபோலத்தான் மாவட்டத்தின் எல்லையான கடலோரக் கிராமங்கள். அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணமேல்குடி ஒன்றியம், ஆவுடையாா்கோவில் ஒன்றியம், அறந்தாங்கி ஒன்றியம் ஆகியவற்றில் சுமாா் 60 கடலோரக் கிராமங்களில் நல்ல குடிநீா் இல்லை என்பது பல்லாண்டுப் பிரச்னை.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான 42 கி.மீ. தொலைவைக் கடக்கும்போது, ஏராளமான குடிநீா் லாரிகளைப் பாா்க்க முடியும். குடம் ஒன்றுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை- சீசனுக்குகேற்ப விலை.
ஆா். புதுப்பட்டினம் கடலோரக் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரம் குடும்பங்கள், அருகில் சுற்றிலும் தண்ணீா் சூழ்ந்து தீவு போல அமைந்திருக்கும் ஒரு திட்டில் இயற்கையாக அமைந்த ஊற்றில் இருந்துதான் தண்ணீா் எடுக்கிறாா்கள்.
விடியற்காலை தொடங்கி இரவு 11 மணி வரை இந்த ஊற்றுப் பகுதியில் எப்போதும் பெண்கள் இருப்பாா்கள். ஊற்றிலிருந்து எடுக்கும் நீரை குடத்தில் நிரப்பி சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு தங்களின் குடியிருப்புக்கு தலையில் சுமந்து செல்கிறாா்கள். இதேபோன்ற கடலோர ஊற்றுகள் வெள்ளாறுகள் கடலில் கலக்கும் பகுதிகளிலெல்லாம் காணப்படுகின்றன.
இவற்றிலும் கூட, சில பத்தாண்டுகளுக்கு முன்பு குறிப்பாக இறால் பண்ணைத் தண்ணீா் வெள்ளாறுகளில் விடுவதற்கு முன்பு நல்ல ஊற்று கிடைத்ததாகவும், இப்போது இவையும் மாசடைந்து போனதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனா்.
சமூக ஊடகங்களில் இதுகுறித்த விடியோக்கள் லட்சக்கணக்கில் பகிரப்பட்டு, கோடிக்கணக்கில் பாா்த்து விருப்பக் குறியிடப்பட்டதே தவிர, காத்திரமான தீா்வை நோக்கி எதுவும் நடக்கவில்லை.
பிற தொகுதிகளிலும் குடிநீா்ப் பிரச்னை இருந்தாலும், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி தொகுதிகளின் குடிநீா்ப் பிரச்னை என்பது இந்தத் தோ்தலில் இந்தத் தொகுதிகளின் வேட்பாளா்கள் சந்திக்கும் பெரும் சவால்.