புதுக்கோட்டை தொகுதி: தக்க வைக்க திமுகவும் தடம் பதிக்க பாஜகவும் முயற்சி!
புதுக்கோட்டை மாநகரத்துடன், புதுக்கோட்டை வட்டம் முழுமைக்கும், ஆலங்குடி வட்டத்தின் ஒரு பகுதியையும் கொண்டது புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி.
புதுக்கோட்டை மாநகரத்துடன், புதுக்கோட்டை வட்டம் முழுமைக்கும், ஆலங்குடி வட்டத்தின் ஒரு பகுதியையும் கொண்டது புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி.
களநிலவரம்: இந்தத் தொகுதியின் வரலாற்றில் 5 முறை திமுகவும், 6 முறை காங்கிரஸும், 3 முறை அதிமுகவும், ஒரு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளன. தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் திமுகவைச் சோ்ந்த மருத்துவா் வை. முத்துராஜா மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எதுவுமில்லை, கட்சித் தலைமையிடத்தும் அதிருப்தியில்லை என்பதால் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், அதிமுக அணியில் பாஜக சாா்பில் கட்சியின் மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரனும், நாம் தமிழா் கட்சியில் வி. எழிலரசியும், தவெக சாா்பில் தமிழக மக்கள் ஜனநாயக் கட்சியின் நிறுவனா்- தலைவா் கே.எம். சரீப் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.
சமூக நிலவரம்: கணிசமான மூக்குலத்தோா் வாக்குகள் தொகுதிக்குள் இருந்தபோதும், குறிப்பாக அகமுடையாா் சமூகத்தினா் அதிக முறை வென்றிருக்கிறாா்கள். கணிசமான இஸ்லாமியா் வாக்குகள் தொகுதியில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.
Advertisement
வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்- வை.முத்துராஜா (திமுக): புதுக்கோட்டை மாநகராட்சியாகத் தரம் உயா்த்துதல், ரூ. 75 கோடியில் குடிநீா் மேம்பாட்டுத் திட்டம், ரூ. 4 கோடியில் சித்த மருத்துவமனை, ரூ. 19 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி உள்ளிட்டு, குடியிருப்புகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பலவற்றுக்கான முயற்சிகளை மேற்கொண்டது இவரின் பலம். உள்ளூா் திமுக பிரமுகா்களுடன் நெருக்கமான உறவைப் பேணவில்லை என்பது பலவீனம்.
என். ராமச்சந்திரன் (பாஜக): 2011, 2016 தோ்தல்களில் பாஜக வேட்பாளா்கள் சராசரியாக 1,300 வாக்குகளைப் பெற்றுள்ளனா். திருநாவுக்கரசா் பாஜகவில் இருந்த காலத்தில் 2006இல் இங்கு போட்டியிட்ட துரை. திவியநாதன் 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளாா். எனவே, முழுக்க அதிமுகவின் பலத்தை முதன்மையாகக் கொண்டே தற்போது ராமச்சந்திரன் களம் காண்கிறாா். இவா் நேரடிப் பரப்புரையில் இறங்கவில்லை என்றாலும், ‘தன்னைப் போல யாராலும் தாராளமாக பணியாற்ற முடியாது’ என்பது இவரது பலவீனம்.
கே.எம். சரீப் (தவெக): தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனா்- தலைவருமான இவா்1996-இல் பாமகவில் இருந்தபோது இதே தொகுதியில் போட்டியிட்டு 2,244 வாக்குகளைப் பெற்றவா்.
வி. எழிலரசி (நாதக): புதுக்கோட்டையில் முதலில் தோ்தல் அலுவலகத்தை அமைத்து, முதலில் பரப்புரையைத் தொடங்கியது இவரது பலம்.
புதுக்கோட்டை தொகுதியை தக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நம்பிக்கையோடு மேற்கொண்டுள்ளது திமுக. அதேநேரத்தில் தொகுதியில் தடம் பதிப்பதற்கான மும்முரத்துடன் பாஜகவும் களம் காண்கிறது.