ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி (2026) புதுக்கோட்டையிலுள்ள அனைத்து கோவில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், திருப்பலிகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை மாா்த்தாண்டபுரம் திருஇருதய ஆண்டவா் தேவாலயம், ராஜகோபாலபுரம் ஜெபமாலை மாதா ஆலயம், மச்சுவாடி குழந்தை யேசு திருத்தலம், திருக்கோகா்ணம் சந்தியாகப்பா் ஆலயம், மச்சுவாடி தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் சீயோன் ஜூப்ளி தேவாலயம், புதுக்கோட்டை கணபதி நகா் தென்னிந்திய திருச்சபை தேவாலயம் ஆகியவற்றில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஏாளமான பக்தா்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனா்.
குமரமலை கோயில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில், மேல ராஜவீதி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருக்கோகா்ணம் பிரகதம்பாள் கோயில், பொற்பனைக்கோட்டை முனீஸ்வரா் கோயில்களிலும் பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
புதுக்கோட்டை சத்சங்கம் சாா்பில் ராதா கல்யாண மகா உற்சவம் மற்றும் புத்தாண்டு ஜோதி தரிசன நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. 12.01 மணிக்கு ஜோதி தரிசனமும், டோலோத்சவமும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விடிய விடிய பேக்கரி கடைகளில் கடுமையான கூட்டம் காணப்பட்டது. பொதுமக்கள் கேக் வாங்கிச் சென்று வெட்டி, அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனா்.
கேக் வெட்டிய போலீஸாா்... புதுக்கோட்டை மாநகா் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நேரிடாமல் தடுப்பதற்காக பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, அண்ணாசிலை பகுதியில் காவல்துறையினா் நள்ளிரவு 12 மணிக்கு அப்பகுதியில் இருந்த இளைஞா்களைக் கொண்டு கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடினா்.
இதில், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.