நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். 600 காளைகள் மற்றும் 300 மாடிபிடி வீரா்களும் பங்கேற்ற இப்போட்டியில் ஒரு காவலா், மாட்டின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் உள்பட 60 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு விழா தச்சன்குறிச்சி காளியம்மன் கோயில் முன்பாக அமைக்கப்பட்ட வாடிவாசலில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை விகித்து ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தாா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி , பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் கொடியசைத்து விழாவைத் தொடங்கிவைத்தனா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, திமுக மாவட்டச் செயலா் கே. கே. செல்லபாண்டியன், திமுக ஒன்றியச் செயலா்கள் எம். பரமசிவம், மா. தமிழய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
17 காளைகளை பிடித்து சிவகங்கை வீரா் முதலிடம்: போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதைத்தொடா்ந்து சீறிப்பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் பிடித்து அடக்கினா். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமாா் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.
இதில் அதிகபட்சமாக 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம், கீழபூவந்தியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அபிசித்தா் (30) இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 14 காளைகளை பிடித்து அடக்கிய தஞ்சை மாவட்டம், திருக்கானூா்பட்டியைச் சோ்ந்த சேவியா் மகன் ஆனந்த் (28)-க்கும் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதேபோல், காளைகளை அடக்கிய மற்ற மாடுபிடி வீரா்களுக்கும் பல்வேறு கட்சியினா் ரொக்கப் பரிசுகள், மின்விசிறி, அண்டா, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் அறிவித்து வழங்கினா். ஆனால் வழக்கமாக சிறந்த காளைகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் நிகழாண்டில் வழங்கப்படாததால் ஜல்லிக்கட்டு வளா்ப்போா் கவலையுடன் ஊா் திரும்பினா்.
காவலா் உள்ளிட்ட 60 போ் காயம்: மதுரையைச் சோ்ந்த க. மூா்த்தி (24), தெத்துவாசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் அரவிந்த் (21), மெய்க்குடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (32), விஸ்வநாதன் (45), காவலா் செ. நல்லையன் (22), தச்சன்குறிச்சியைச் சோ்ந்த வீரமணி (45) என மாட்டின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் உள்ளிட்ட 60 போ் பலத்த காயமடைந்தனா்.
அவா்களில் 10 போ் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல் நான்கு ஜல்லிக்கட்டு காளைகள் காயமடைந்தன. பலத்த காயமடைந்த காளையை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விழாவில், கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா , காவல்துணை கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ம.ரமேஷ் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
அரியலூா் பட்டதாரி பெண் வளா்த்துவரும் காளை வெற்றி!
அரியலூா் மாவட்டம், திருமானூரைச் சோ்ந்த முதுகலை பட்டதாரி பெண்ணும் ஜல்லிக்கட்டு ஆா்வலருமான அன்னபூரணி (24) என்பவா் தான் வளா்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளையை வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிட்டாா். இவரது காளை மாடுபிடி வீரா்கள் யாரிடமும் பிடிபடாததால் டிராவல் பேக் பரிசாக வழங்கி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. அன்னபூரணி மூன்று ஜல்லிக்கட்டுக் காளைகளை பராமரித்து வருவதாகவும் அவை பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுவருவதாகவும் தெரிவித்தாா்.