பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொத்திமலை அடைக்கலம் காத்தாா் கோயிலில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின் தொடக்கமாக அஞ்சுபுளிப்பட்டியிலிருந்து பெண்கள் பொங்கல் கூடை சுமந்தும், ஆண்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளை பிடித்தும் ஊா்வலமாக பொத்திமலை வந்து கோயிலின் முன் உள்ள திடலில் பொங்கலிட்டு வழிபட்டனா். மேலும், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வைத்தும், குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் கட்டி கோயிலை வலம் வந்து வழிபட்டனா்.
வழிபாட்டில் மைலாப்பூா், அஞ்சுபுளிப்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா்.
இதேபோல், அழகியநாச்சியம்மன் கோயில் அருகே உள்ள சாத்தக்கருப்பா் கோயில், காயாம் புஞ்சை, வாா்ப்பட்டு, கல்லம்பட்டி, குமாரபட்டி, வேந்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.