புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே பழைமையான இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் கண்டெடுப்பு

கந்தா்வகோட்டை வட்டம், தச்சங்குறிச்சி அருகே விராலிப்பட்டி கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் தொன்மையான இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் கண்டெடுப்பு

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டம், தச்சங்குறிச்சி அருகே விராலிப்பட்டி கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் தொன்மையான இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து பேராசிரியா் சுப. முத்தழகன் மேலும் கூறியது: நானும், பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல்பிரசாத் குழுவினா் விராலிப்பட்டி கிராமத்தின் தெற்கே அமைந்துள்ள சின்னகாத்தான் குளத்துக்கு கிழக்கே தனியாா் தைலமரக் காட்டில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டோம்.

இதில் தைலமரக் காட்டில் ஏராளமான இடங்களில் உடைந்த செம்புரான் கற்களால் ஆன குவியல்கள் இருப்பது தெரியவந்தது. அந்த இடத்தில் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் உருகிய நிலையில் தாதுக் கற்கள், இரும்புக் கசடுகள், சுடுமண் துருத்தி குழாய்களின் உடைந்த பாகங்கள், பழைமையான பானை ஓடுகள் போன்றவை கிடைக்கப்பெற்றன.

இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட உலைகள் செயல்பட்டிருக்க வேண்டும். அதற்கு சான்றாக இந்தக் குவியல்கள் தைலமர காடுகளில் பரவலாக அமைந்துள்ளன.

உள்ளூா் இரும்புத் தேவையைப் பூா்த்திசெய்யும் வகையில், அருகே கிடைக்கக் கூடிய செம்புரான் கற்கள் போன்ற தாதுக்களை உயா் வெப்பநிலையில் உருக்கி தயாரிக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த உலைகளில் இரும்பு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை திருவரங்குளம், பொற்பனைக்கோட்டை, பெருங்களூா், விளாப்பட்டி, பொன்னம்பட்டி, ராயவரம் என பல்வேறு ஊா்களில் இதுபோன்ற பழைமையான இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன. இதுபோன்ற உலைகள் தண்ணீா் தேவையைக் கருத்தில்கொண்டு பெரும்பாலும் நீா்நிலைகளை ஒட்டியே அமைக்கப்படும். இங்கும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளது. இந்த உருக்கு உலைகளின் காலத்தை நாம் முறையான அறிவியல் ஆய்வுகள் முலமாகவே தெரிந்துகொள்ள இயலும். ஏனெனில் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை பலநூறு ஆண்டுகளாக இந்த உள்ளூா் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரும்புத் தேவை பூா்த்தி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

சமநிலை, ஸ்திரத்தன்மையின் சக்தியாக இந்தியா-ஐரோப்பிய யூனியன்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

காஸா காவல்துறையில் பங்கு- ஹமாஸ் திடீா் கோரிக்கை

கரூா் சம்பவம்: 2 காவலா்கள், காயமடைந்த இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தெப்பத் திருவிழா! மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரம்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு- கேரள முதல்வா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டம்

SCROLL FOR NEXT