ஏபிவிபி அமைப்பைக் கண்டித்து தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பைக்
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். மனோகரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கோ. நீலமேகம், சி.ஐ.டியு. மாவட்டச் செயலர் சி. ஜெயபால், துணைச் செயலர் கே. அன்பு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன், கட்சியின் ஒன்றியச் செயலர் எம். மாலதி, ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலர் எஸ்.எம். ராஜேந்திரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலர் ஆதி.இல. அறிவுடைநம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியை எரித்தது, கேரள முதல்வரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக ஏ.பி.வி.பி. அமைப்பைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நடராஜன், சின்னை பாண்டியன், ஒன்றியச் செயலர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.