பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு முறிந்த வயதான பெண்ணுக்கு வியாழக்கிழமை இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு முறிந்த வயதான பெண்ணுக்கு வியாழக்கிழமை இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், பாவாஜிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமி ( 52). கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டில் தவறி விழுந்ததால் இடுப்பு மூட்டு எலும்பில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் ஆலோசனையின்பேரில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராணி அசோகன் அறிவுரைப்படி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிவா, நியூட்டன், மயக்க மருந்து நிபுணர் கபிலன், தலைமை செவிலியர் விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை லெட்சுமிக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். சாதனை நிகழ்த்திய மருத்துவர் குழுவை தஞ்சை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.