முகப்பு
தஞ்சாவூர்

அனைவருக்கும் குடிநீர், அனைத்து வீடுகளுக்கும் புதை வடிகால்வசதி: ஸ்மார்ட் சிட்டியாகும் முனைப்பில் தஞ்சாவூர் மாநகராட்சி 

தஞ்சாவூர் மாநகராட்சி பொலிவுறு நகரமாகும் (ஸ்மார்ட் சிட்டி) முனைப்பின் முதல்படியாக, அனைவருக்கும் குடிநீர்,  அனைத்து வீடுகளுக்கும்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

தஞ்சாவூர் மாநகராட்சி பொலிவுறு நகரமாகும் (ஸ்மார்ட் சிட்டி) முனைப்பின் முதல்படியாக, அனைவருக்கும் குடிநீர்,  அனைத்து வீடுகளுக்கும் புதை வடிகால் வசதியை வழங்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளது.
மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் 2016,  செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட  பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) பட்டியலில் தஞ்சாவூர் மாநகரம் இடம்பிடித்தது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பொதுமக்களின் கருத்துகளின் படி,  தஞ்சை மாநகரில் தஞ்சை பெரியகோயில், கோயிலைச் சுற்றியுள்ள அகழி சார்ந்த பகுதி, ராசா மிராசுதார் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதி, பழைய பேருந்து நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய 2.6 சதுர கி.மீ. இடம் தேர்வு செய்யப்பட்டது. 
இப்பகுதிகளில் ரூ.531.99 கோடியில் சுகாதாரம், பேருந்து நிலையங்கள் மேம்பாடு, பூங்காக்கள் மேம்பாடு, குளங்கள் மேம்பாடு, அகழி மேம்பாடு, நவீன சாலைகள், பழைமையான கட்டடங்களை சீரமைத்தல், திறந்தவெளி கலையரங்கம், வணிக வளாகம் அமைத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதே போல, நகரம் முழுவதும் ரூ.374.98 கோடியில் திடக்கழிவு, குடிநீர் விநியோகம், புதை வடிகால், பசுமை திட்டங்கள், நவீனமயமாக்குதல் திட்டங்களை செயல்படுத்துதலும் பொலிவுறு நகரத் திட்டத்தில் அடக்கம்.
இத்திட்டத்திற்காக தஞ்சை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரியை தலைவராகக் கொண்ட நிர்வாக இயக்குநர்கள் குழு கூட்டங்களை நடத்தி,  திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் தற்போது குடிநீர் மேம்பாடு, புதை வடிகால் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தஞ்சை மாநகரில் சுமார் 45 ஆயிரம் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், நாளொன்றுக்கு ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் ரூ. 191.75 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு, இரண்டு பகுதிகளாக செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ்,  திருமானூர் கொள்ளிடத்தில் ரூ. 14.92 கோடியில் பெரிய அளவிலான இரண்டு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளும், இதன் மேல் ரூ. 29 லட்சத்துக்கு நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இவைகளுக்குத் தேவையான எலக்ட்ரிக்கல் பொருள்கள், இயந்திரப் பொருள்கள் ரூ. 4.10 கோடிக்கு வாங்கப்பட உள்ளன. மேற்கண்ட பெரிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் நீர், ரூ. 1.40 கோடியில் கட்டமைக்கப்பட உள்ள குழாய்கள் வழியாக ஒக்கக்குடிக்கு கொண்டு வரப்படும். 
ஒக்கக்குடியில் ரூ. 6.29 கோடியில் நீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டு, அங்கிருந்து வெண்ணாற்றில் ரூ. 36.73 கோடியில் அமைக்கப்பட உள்ள நீரேற்று நிலையம் வழியாக பல கோடி செலவில் கொள்ளிடம், வெண்ணாறு, காவிரி ஆறுகள், நிலப்பரப்புகளில் அமைக்கப்பட உள்ள 61 கி.மீ. நீள புதிய பிரதான குடிநீர் குழாய்கள் வழியாக 19 மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
மேலும், பழைய நீர்த்தேக்கத் தொட்டிகள் மேம்பாடு செய்யப்பட்டு, ரூ. 1.17 கோடியில் பொருத்தப்பட உள்ள வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்புகளின் வழியாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது. இதை கண்காணிக்க ரூ. 6.71 கோடியில் ஸ்கேடா கண்காணிப்பு அமைப்பும் நிறுவப்பட உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல, மாநகரின் 51 வார்டுகளில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ. 93.68 கோடியில் புதை வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் குறிப்பாக, முதலாவது கோட்டத்தில் ரூ. 46.51 லட்சத்துக்கும், 2 ஆவது கோட்டத்தில் ரூ. 5.39 கோடிக்கும், 3 ஆவது கோட்டத்தில் ரூ. 12.79 கோடிக்கும், 4 ஆவது கோட்டத்தில் ரூ. 9.24 கோடிக்கும், 5 ஆவது கோட்டத்தில் ரூ. 11.19 கோடிக்கும் என மொத்தம் ரூ. 39.09 கோடியில் 61 கி.மீ. தூரத்திற்கு புதை வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளன. 
3, 4, 5 ஆவது கோட்டங்களில் ரூ. 15.89 லட்சத்தில் கழிவுநீரேற்று நிலையங்களும், இவற்றை இணைக்கும் வகையில் 7.5 கி.மீ. நீளத்துக்கு ரூ. 47.47 லட்சத்துக்கு பிரதான கழிவுநீர் குழாய்களும் அமைக்கப்பட உள்ளன.
சேகரிக்கப்படும் புதை சாக்கடை முழுவதுமாக வடிகட்டப்பட்டு, 15 வால்வுகள் வழியாக சுமார் 92 ஏக்கர் பாசன வயல்களின் விவசாய பாசனத்துக்கு விடப்பட உள்ளது. மீதமுள்ள சுத்திகரிக்கப்பட்ட நீர் வடவாற்றில் விடப்படும் என்றனர் அதிகாரிகள். 

ஓராண்டுக்குள் நிறைவடையும்
தஞ்சை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி. காளிமுத்து கூறியது:
 தஞ்சாவூரை பொலிவுறு நகரமாக்க ரூ.1,289.5 கோடிக்கு திட்டமதிப்பீடு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாநகரின் மாநகராட்சி குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ரூ. 191.75 கோடிக்கு குடிநீர் வழங்கல் மற்றும் விநியோகிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.93.68 கோடியில் புதை வடிகால் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி ஒப்பந்தம் விடப்பட உள்ளது. ஓராண்டுக்குள் இப்பணிகள் நிறைவுறும். இப்பணிகள் நிறைவுற்றால் அனைவருக்கும் குடிநீர், அனைத்து வீடுகளுக்கும் புதை வடிகால் வசதி சாத்தியமாகும் என்றார் அவர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →