அரசு, தனியார் பேருந்துகளில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள், பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் 30 கி.மீ. சுற்றளவில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்சமாக ரூ. 5 என்றும், அதிகபட்சமாக ரூ. 13 ஆகவும் இருந்தது. இப்போது, கட்டண உயர்வால் அதிகபட்சமாக ரூ. 13-இல் இருந்து ரூ. 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 5 ஆக இருந்த கட்டணம் ரூ. 10 ஆகவும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு ரூ. 7 என இருந்த கட்டணம் இப்போது ரூ. 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வெளியூர் பேருந்துகள் (அடைப்புக்குள் பழைய கட்டணம்): இதேபோல, தஞ்சாவூர் - திருச்சி ரூ. 51 (ரூ. 31), தஞ்சாவூர் - புதுக்கோட்டை ரூ. 48 (ரூ. 33), தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரூ. 48 (ரூ. 33), தஞ்சாவூர் - கும்பகோணம் ரூ. 43 (ரூ. 29), தஞ்சாவூர் - மதுரை ரூ. 133 (ரூ. 90), தஞ்சாவூர் - திருவாரூர் ரூ. 60 (ரூ. 42), தஞ்சாவூர் - நாகை ரூ. 83 (ரூ. 51), தஞ்சாவூர் - வேளாங்கண்ணி ரூ. 95 (ரூ. 62), தஞ்சாவூர் - மயிலாடுதுறை ரூ. 67 (ரூ. 50), தஞ்சாவூர் - வேலூர் ரூ. 260 (ரூ. 190, தஞ்சாவூர் - சென்னை ரூ. 313 (ரூ. 200).
விரைவுப் பேருந்துகள் (அடைப்புக்குள் பழைய கட்டணம்): தஞ்சாவூர் - சென்னை ரூ. 394 (ரூ. 250), தஞ்சாவூர் - பெங்களூரு ரூ. 555 (ரூ.395), தஞ்சாவூர் - ஒசூர் ரூ. 414 (ரூ.270), தஞ்சாவூர் - திருப்பதி ரூ. 485 (ரூ. 355), தஞ்சாவூர் - வேலூர் ரூ. 355 (ரூ.225).
இந்தப் புதிய கட்டண விவரம் சனிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்தாலும் பெரும்பாலான பயணிகளுக்குத் தெரியவில்லை. இதனால், பேருந்துகளில் நடத்துநர் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் கூறியபோது, பயணிகள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர். மேலும், பல பேருந்துகளில் நடத்துநருக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கட்டண உயர்வு குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன் தெரிவித்தது:
பேருந்துக் கட்டண உயர்வு அநீதியானது. ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பால் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்த சாதாரண மக்கள் மீது மிகப்பெரும் தாக்குதலை தமிழக அரசுத் தொடுத்துள்ளது. இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். போக்குவரத்துக் கழகங்களின் நலிவுக்கும், நட்டத்துக்கும் ஊழலும் பொறுப்பற்ற நிர்வாகமுமே காரணம் என்றார்.
கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி பொதுச் செயலர் துரை. மதிவாணன் தெரிவித்தது: ஊதிய உயர்வுக்காகக் கட்டணத்தை உயர்த்துவதாக அரசுக் கூறுவதை ஏற்க முடியாது. பேருந்து சேவை என்பது லாப நோக்கமற்றது. எனவே, கல்வி, விவசாயத்துக்கு ஒதுக்கீடு செய்வதுபோல் போக்குவரத்துத் துறைக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமே தவிர, மக்கள் மீது சுமையை ஏற்றுவது ஏற்புடையதல்ல என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.