தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாக திறக்கப்படாத உயிர் காக்கும் சிகிச்சை பிரிவுகள்
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட முதியோர் உள்நோயாளிகள்
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட முதியோர் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவுகள் கடந்த 6 மாதங்களாக திறக்கப்படாததால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 3,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு இதய சிகிச்சை, குழந்தைகள் நலம், பொது மருத்துவம், சிறுநீரகவியல், கண் மருத்துவம், பல் மருத்துவம், புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட 33 பிரிவுகள் இயங்கி வருகின்றன.
இதில் கேண்டீனுக்கு எதிர்புறம் உள்ள கட்டடத்தில் வயது முதிர்ந்த நோயாளிகளின் வசதிக்காக ரூ. 43 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முதியோர் உள்நோயாளிகள் பிரிவும், சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்புப் பிரிவும் கடந்த 6 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. பெரும் முயற்சிக்கு பின்னர் கோடிக்கணக்கான செலவில் கட்டப்பட்ட இப்பிரிவுகள் யாருக்கும் பயன்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள கருவிகளும், இயந்திரங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் கூறியது:
மத்திய அரசின் நிதியுதவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவமனை முதல்வராக இருந்த ஜெயக்குமாரின் தீவிர முயற்சியின்பேரில், ரூ. 43 லட்சம் செலவில் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கு உள்சிகிச்சை வார்டு அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து கேண்டீனுக்கு எதிரே இருந்த கட்டடத்தின் தரைதளத்தில், எலும்பு முறிவு உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு இருந்த இடத்தை மாற்றி, அங்கு முதியோர் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் காற்றோட்ட வசதியுடன், அதிதீவிர சிகிச்சைக்கான 4 படுக்கைகள் உள்பட 28 அதிநவீன படுக்கை வசதிகள், முதியோர்கள் பயன்படுத்தும் வகையிலான கைப்பிடியுடன் கூடிய கழிவறைகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் தனியார் மருத்துவமனையை விஞ்சும் வகையில் முதியோர் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டது.
இதேபோல, அதே கட்டடத்தில் 500 ஆவது வார்டு இருந்த 13 ஆவது எண் கொண்ட வார்டு பகுதியை மாற்றி, ரத்த சுத்திகரிப்பு வார்டாக கடந்த 6 மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டது. இங்கு மத்திய மாநில அரசுகளால் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட 6 டயாலிசிஸ் இயந்திரங்கள், தனியார் தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் என மொத்தம் ரூ. 72 லட்சம் மதிப்பிலான 12 டயாலிசிஸ் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் 12 படுக்கை வசதிகளுடன், அதிநவீன பில்டர்களுடன் கூடிய டயாலிசிஸ் இயந்திரங்களுக்கும், நோயாளிகளுக்கும் பயன்படும் வகையில் ரூ. 9 லட்சம் மதிப்பில் தண்ணீர் சுத்திகரிப்பானும், ஏசி உள்ளிட்ட இதர வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவை 6 மாத காலமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் முதியோர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் 250-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், ரத்த சுத்திகரிப்புக்காக வரும் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும் பயனின்றி மேற்கண்ட பிரிவுகள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரின் வருகைக்காக காத்திருப்பு?....
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வந்தால்தான் இப்பிரிவுகள் திறக்கப்படும் என மருத்துவமனையின் உயரதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டால் நோயாளிகளின் நலன் கருதி, மருத்துவமனை முதல்வர்களே திறந்து வந்த நிலையில், தற்போது உயிர்காக்கும் சிகிச்சை பிரிவுகள் கூட 6 மாத காலமாக அமைச்சரின் வருகைக்காக காத்திருப்பது மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி முதல்வர் விளக்கம்:
இதுகுறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் எம். இளங்கோவன் கூறுகையில், மிக விரைவில் இப்பிரிவுகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றார்.