வழிப்பறி சம்பவங்கள்: 5 பேர் கைது
தஞ்சாவூரில் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூரில் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூரில் இரவு நேரத்தில் தனியாக வருபவர்களை வழிமறித்து, தாக்கி செல்லிடப்பேசி, மோட்டார் சைக்கிள், பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் செல்வதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், சாலையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்ட போலீஸார் பள்ளியக்ரஹாரம் பகுதியில் ஒரு குழுவினர் இரு நாட்களாக சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடுவது தெரிய வந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் போலீஸார் கண்காணித்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இருவரும் அளித்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை பிடித்தனர்.
இதில், அவர்கள் தஞ்சாவூர் ரயில்வே காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (26), மானோஜிபட்டி கன்னியம்மாள் நகரைச் சேர்ந்த ஆனந்த் (21), பாண்டியன் (20), திடீர் காலனியைச் சேர்ந்த செல்வமணி (22), காமாட்சி நகரைச் சேர்ந்த விக்ரம் (22) ஆகியோர் என்பதும், 5 பேரும் இரவில் முகமூடி அணிந்து வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.