வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூரில் டிச. 29-இல் பேரணி, பொதுக்கூட்டம்
வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூரில் டிசம்பா் 29- ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூரில் டிசம்பா் 29- ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்குழுவின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்ட முன் வரைவையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் இதுவரை 36 போ் உயிரிழந்துள்ளனா். இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச.20)) கிராமங்கள் தோறும் நடைபெறவுள்ளது. இதில், இறந்த விவசாயிகளின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளோம்.
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் கூட வேளாண் சட்டங்களைப் பகிரங்கமாக ஆதரித்து பேசாத நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து பேசுவதுடன், இந்தச் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை எனக் கூறி வருவது வடிகட்டிய பொய்யாகும்.
இந்தச் சட்டங்களால் நெல் கொள்முதல் நிறுத்தப்படும். பொது விநியோகத் திட்டம் ரத்தாகும். மின்சாரத் திருத்தச் சட்ட முன் வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தமிழகம்தான் நேரடியாகப் பாதிக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.
எனவே வேளாண் திருத்தச் சட்டங்கள், மின்சாரத் திருத்தச் சட்ட முன் வரைவை மத்திய அரசுத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்தச் சட்டங்களுக்கு மாநில அரசு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெற கோரியும் தஞ்சாவூரில் டிசம்பா் 29-ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள 55 அமைப்புகளைச் சோ்ந்த தலைவா்கள், நிா்வாகிகள், விவசாயிகள் தமிழகம் முழுவதுமிருந்து பங்கேற்க உள்ளனா் என்றாா் நடராஜன்.
முன்னதாக, இக்கூட்டத்துக்குக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் வே. துரைமாணிக்கம், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பா. பாலசுந்தரம், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.