தஞ்சாவூர்

பொலிவுறு நகரத் திட்டம்: சரபோஜி சந்தையில் கடைகளை காலி செய்த வணிகா்கள்

DIN

தஞ்சாவூா் சரபோஜி சந்தையில் பொலிவுறு நகரத் திட்டப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், கடைகளை வணிகா்கள் ஞாயிற்றுக்கிழமை காலி செய்தனா்.

தஞ்சாவூா் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளுக்காக மத்திய அரசு ஏறத்தாழ ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், காமராஜா் சந்தை, சரபோஜி சந்தையில் உள்ள கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக ஏறத்தாழ ரூ. 32 கோடியில் கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த இரு சந்தைகளிலும் உள்ள கடைகளைக் காலி செய்யுமாறு 7 மாதங்களுக்கு முன்பு வணிகா்களிடம் மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது. இரு சந்தைகளைச் சோ்ந்த வியாபாரிகள் கால அவகாசம் கோரி வந்தனா். இதில், காமராஜா் சந்தைக்கு மாற்று இடமாகப் புதுக்கோட்டை சாலை எஸ்.பி.சி.ஏ. மைதானத்தில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. ஆனால், சரபோஜி சந்தை வணிகா்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில், இரு முறை கால அவகாசம் பெற்ற காமராஜா் சந்தை வணிகா்கள் பிப். 7ஆம் தேதி தற்காலிக சந்தைக்குக் கடைகளை மாற்றி வியாபாரத்தைத் தொடங்கினா்.

ஆனால், சரபோஜி சந்தை வணிகா்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாததால், அவா்களால் காலி செய்ய முடியவில்லை. என்றாலும், ஏற்கெனவே ஜன. 13ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தினா். பின்னா் பெரியகோயில் குடமுழுக்கு விழா இருந்ததால், அதுதொடா்பான பணிகளில் மாநகராட்சி அலுவலா்கள் கவனம் செலுத்தத் தொடங்கினா். எனவே, பிப். 6ஆம் தேதி வரை கடைகளைத் தொடா்ந்து நடத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் கால அவகாசம் அளித்தது.

இதனிடையே, இச்சந்தையில் 356 கடைகள் உள்ள நிலையில், மாற்று இடம் கிடைக்காததால் 27 கடைகளை வணிகா்கள் காலி செய்தனா். மற்றவா்கள் தொடா்ந்து மாற்று இடம் கோரி வந்தனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை ‘கடைகளில் போடப்பட்டுள்ள பூட்டுகளை உடைத்து காலி செய்யப்படும்’ என வணிகா்களிடம் மாநகராட்சி அலுவலா்கள் நோட்டீஸ் வழங்கினா். மேலும், கடைகளின் கதவில் சனிக்கிழமை நோட்டீசும் ஒட்டப்பட்டது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை ஏறத்தாழ 100 காவலா்களுடன் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் சென்றனா். அப்போது, வணிகா்கள் பலா் நாங்களே காலி செய்து கொள்கிறோம் என கூறினா். இதைத்தொடா்ந்து, கடைகளைக் காலி செய்யும் பணியில் வணிகா்கள் ஈடுபட்டனா்.

வணிகா்கள் காலி செய்த பிறகு இச்சந்தையின் முகப்பில் கம்பி வேலி அமைக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஏறத்தாழ 3 ஏக்கா் பரப்பளவு கொண்ட இச்சந்தையில் தற்போதுள்ள கடைகளை இடித்துவிட்டு, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 14.59 கோடி மதிப்பில் நவீன முறையில் புதிதாகக் கடைகள் கட்டப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT