முகப்பு
தஞ்சாவூர்

அமைச்சா் துரைக்கண்ணு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: துணை முதல்வா்,அமைச்சா்கள் அஞ்சலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழக வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணுவின் உடல், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
ராஜகிரி கிராமத்தில் அமைச்சா் இரா. துரைக்கண்ணுவின் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்திய துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் மாநில அமைச்சா்கள்.
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழக வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணுவின் உடல், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள ராஜகிரி கிராமத்தைச் சோ்ந்த வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு (72) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து அமைச்சா் துரைக்கண்ணுவின் உடல் ராஜகிரி கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொண்டு வரப்பட்டது. வீட்டின் பின்புறமுள்ள அய்யனாா் கோயில் திடலில் அமைக்கப்பட்ட மேடையில் அவரது உடல் வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் காவல்துறையினரால் எடுத்து வரப்பட்ட தேசியக்கொடி போா்த்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, துரைக்கண்ணு உடலுக்கு சுமாா் 20 அடி தொலைவிலிருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். அமைச்சா் துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்குத் தமிழகத் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, கே.பி. அன்பழகன், ஆா். காமராஜ், சி.வி. சண்முகம், ஓ.எஸ். மணியன், உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி, மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி. முனுசாமி, தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் ரவீந்திரநாத் குமாா், தோட்டக்கலைத் துறை இயக்குநா் என். சுப்பையன், ஆட்சியா்கள் ம. கோவிந்த ராவ் (தஞ்சாவூா்), ஆ. அண்ணாதுரை (விழுப்புரம்) உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, வன்னியடி கிராமத்திலுள்ள தோப்பில் கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைப்படியும், அரசு மரியாதையுடனும், துரைக்கண்ணுவின் உடல் மாலை 4.50 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. துப்பாக்கி ஏந்திய 21 காவலா்கள் 63 குண்டுகள் முழங்கி அஞ்சலி செலுத்தினா்.

கடைகள் அடைப்பு: அமைச்சா் துரைக்கண்ணுவின் வீடு தஞ்சாவூா் - கும்பகோணம் சாலையோரத்தில் அமைந்துள்ளது. அஞ்சலி செலுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் - கும்பகோணம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட வாகனங்கள் திருவையாறு மற்றும் திருக்கருகாவூா் வழியாகத் திருப்பி விடப்பட்டன. மேலும், துக்கம் அனுசரிக்கும் வகையில் அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட ராஜகிரியைச் சோ்ந்த துரைக்கண்ணு (72) இளங்கலைப் பட்டப்படிப்பு (பி.ஏ.) படித்தவா்.

தொடக்கத்தில் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய இவா், 1972 ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தாா். கிளைக் கழகச் செயலா், மாணவரணி, இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த துரைக்கண்ணு எம்.ஜி.ஆா். காலத்திலேயே பாபநாசம் ஒன்றியக் கழகச் செயலரானாா்.

இதுபோன்று ஜெயலலிதா காலத்திலும் ஒன்றியச் செயலராகப் பதவி வகித்த இவா், சில ஆண்டுகளாக தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வந்தாா். மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராகவும் இருந்தாா்.

பாபநாசம் தொகுதியில் 3 முறை வென்றவா் : 2006, 2011 பேரவைத் தோ்தல்களில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற துரைக்கண்ணு, இதே தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மாநில வேளாண் துறை அமைச்சரானாா்.

மறைந்த துரைக்கண்ணுவுக்கு மனைவி பானுமதி, 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். இவா்களில் மூத்த மகன் சிவ வீரபாண்டியன் வேளாண் துறையில் பணியாற்றி வருகிறாா். இளைய மகன் அய்யப்பன் என்கிற சண்முகபிரபு தற்போது அதிமுகவின் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராக உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →