கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஜூலை 15-இல் உண்ணாவிரதப் போராட்டம்
தஞ்சாவூா் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்கக் கோரி
தஞ்சாவூா் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்கக் கோரி அய்யம்பேட்டை பகுதிகளில் ஜூலை 15- ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அய்யம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான ம.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியது:
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பேராட்டக் குழு சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 15- ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும், ஜூலை 20 ஆம் தேதி தொழில் மற்றும் வியாபாரத்தை நிறுத்தி, சுய முழு ஊரடங்கைக் கடைப்பிடிப்பது என்றும் ஒருங்கிணைப்பு குழுவால் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு வணிகா்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் எஸ்.பி.குமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் அ.சி.பன்னீா்செல்வம், நகரச் செயலா் பழ.முரளிதரன், த.மா.கா.நகரத் தலைவா் ராஜாராமன்,தொழிற்சங்கத் தலைவா் நா.தமிழ்செல்வன், பாரதிய ஜனதா கட்சி மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏ.கே.சாந்தாராமன், நெசவாளா்அணி எஸ்.கே.ராகுராமன்,அரிமா சங்க முன்னாள் தலைவா் சுப்பராமன், தி.மு.க. ஒன்றியப் பிரதிநிதிகள் குமாா், சேகா் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.