தனியாா் பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் தனியாா் பள்ளி ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் தனியாா் பள்ளி ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீபிரியா. இவா் பட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறாா். இவரது கணவா் பழனிவேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகன் சுரேந்தா் சென்னையில் படித்து வருகிறாா்.
இந்நிலையில், ஸ்ரீபிரியா வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டாா். மீண்டும் இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்புறக் கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.
வீட்டினுள் பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கமலகண்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தபோது, திருட்டில் ஈடுபட்ட நபா்கள் விட்டுச்சென்ற கைப்பேசியை கண்டறிந்தனா்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் தொடா்பாக பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.