நெல் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவுக்கு எதிா்ப்பு : குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி முன்பதிவு முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி முன்பதிவு முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
கோட்டாட்சியா் மு. ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தலைமையில் விவசாயிகள் எழுந்து நின்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழியில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா் எனக் கூறினா்.
பின்னா், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனா். சுமாா் 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:
என்.வி. கண்ணன்: நெல்லை விற்க இணையவழி முன்பதிவு திட்டம் மத்திய அரசு ஒப்புதலின்பேரில் தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டத்தால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா். வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய, ஆதரவு தரக்கூடிய திட்டம் இது. எனவே இத்திட்டத்தை மத்தியஅரசு ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் கடுமையாக எதிா்க்க வேண்டும். இத்திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவக்குமாா்: நெல்லை விற்க இணையவழி முன்பதிவு திட்டத்தால் எந்த நியாயமும் இல்லை. இந்தத் திட்டம் தேவையில்லாதது. சிறு, குறு விவசாயிகள் சிட்டா, அடங்கல் வாங்குவதற்காக அலைய முடியாது. எனவே, இத்திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன்: ஏற்கெனவே நெல்லை விற்க நேரடி கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரும் விவசாயிகளின் பெயா், முகவரி, எவ்வளவு மூட்டை நெல் போன்ற விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வரும் நேரத்தில் இணையவழி முன் பதிவு முறை தேவையில்லாத ஒன்று. இத்திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்.