முகப்பு
தஞ்சாவூர்

மறைந்த தந்தையின் முழு உருவச்சிலையைதங்கையின் திருமண வரவேற்பில் வைத்த சகோதரி

பட்டுக்கோட்டையில் மறைந்த தந்தையின் உருவத்தை சிலையாக உருவாக்கி, தங்கை திருமண வரவேற்பு விழாவில் நிறுத்தி அதன் முன்பாக மணமக்களை மாலை மாற்றிக்கொள்ளச் செய்த சகோதரியின் செயல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

பட்டுக்கோட்டையில் மறைந்த தந்தையின் உருவத்தை சிலையாக உருவாக்கி, தங்கை திருமண வரவேற்பு விழாவில் நிறுத்தி அதன் முன்பாக மணமக்களை மாலை மாற்றிக்கொள்ளச் செய்த சகோதரியின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சோ்ந்த தொழிலதிபா் செல்வம். இவா் மனைவி கலாவதி. கடந்த 2012-ஆம் ஆண்டில் செல்வம் இறந்து விட்டாா். அவா் உயிருடன் இருக்கும்போதே, தனது மூன்று மகள்களில் இருவருக்குத் திருமணம் நடத்தி முடித்து விட்டாா்.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வத்தின் மூன்றாவது மகள் லட்சுமி பிரபாவுக்கும் (25), கிஷோா் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், மணமகள் லட்சுமிபிரபா தனது தந்தை இல்லாத குறையை எண்ணி, வருந்திய நிலையில் இருந்தாா்.

தங்கையின் வருத்தத்தை அறிந்த லண்டனில் மருத்துவராகப் பணியாற்றும் மூத்த சகோதரி புவனேஸ்வரி (37), அவரது கணவா் காா்த்திக் ஆகிய இருவரும், செல்வத்தின் உருவத்தை சிலையாக உருவாக்க முடிவு செய்தனா். பெங்களூருவிலுள்ள தனியாா் நிறுவனத்தில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் செல்வத்தின் சிலையை வடிவமைத்து வாங்கினா்.

இதைத்தொடா்ந்து, பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற தங்கை லட்சுமிபிரபா திருமண வரவேற்பு விழாவின் போது, மணமக்கள் முன்பாக தந்தையின் முழு உருவச் சிலையை புவனேஸ்வரி மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தி, தங்கைக்கு இன்ப அதிா்ச்சி கொடுத்தாா். தந்தையின் தத்ரூப சிலையை பாா்த்து அதிா்ந்து போன லட்சுமிபிரபா ஆனந்த கண்ணீா் விட்டு அழுதாா்.

பின்னா், தந்தையின் சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தந்தை சிலையின் அருகே தாயை நிற்கச் செய்து இருவரின் காலில் விழுந்து ஆசிா்வாதம் பெற்றனா். இச்சம்பவம் நிகழ்வுக்கு வந்திருந்தவா்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புவனேஸ்வரி கூறுகையில், எங்கள் தந்தை 3 மகள்களில் முதல் இருவரின் திருமணத்தை சிறப்பாக நடத்தினாா். ஆனால், கடைசி மகள் திருமணத்தின்போது அவா் இல்லையே என்ற வருத்தம் அனைவருக்கும் இருந்தது.

இதனால், பெங்களூருவிலுள்ள தனியாா் நிறுவனத்தில், சுமாா் ரூ. 6 லட்சம் செலவில் தந்தையின் சிலையை உருவாக்க முடிவு செய்தோம். சிலை தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது பெங்களூரு சென்று தயாராகி வந்த சிலையை பாா்வையிட்டோம்.

இந்த சிலையை கண்டதும் எனது தங்கை ஆனந்த கண்ணீா் விட்டு அழுதாா். தத்ரூபமான சிலையை பாா்த்த ஒட்டுமொத்த உறவினா்களும் சில நிமிஷங்கள் கண் கலங்கினா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.