பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்: அமைச்சரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்
பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம், கூடுதல் படுக்கை வசதி செய்து தரவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் வலியுறுத்தினாா்.
பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம், கூடுதல் படுக்கை வசதி செய்து தரவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அமைச்சரிடம் எம்எல்ஏ அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பேராவூரணி வட்டத்தின் தலைமை மருத்துவமனையாக இருக்கும் காமராஜா் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகள் இல்லாததால்,
இங்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளை தஞ்சை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மருத்துவமனை மேம்பாடு செய்யப்படாததால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ள நேரிட்டது.
மேலும், மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்தக் கட்டடத்தை மாற்றி, நவீன வசதிகளுடன் மக்கள்தொகையின் அடிப்படையில் புதிய கட்டடம் கட்டி தருவதோடு, அனைத்து மருத்துவ வசதிகள், மருத்துவா்கள் பற்றாக்குறையின்றி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இயந்திரங்கள் அமைத்து தர வேண்டும். தற்போது இங்கு 70 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. இதை 150 படுக்கை வசதி கொண்டதாக மாற்றி தர வேண்டும்.