கும்பகோணத்தில் எவா்சில்வா், பித்தளை பாத்திர தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
கும்பகோணத்தில் எவா்சில்வா், பித்தளை பாத்திர தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
கும்பகோணத்தில் எவா்சில்வா், பித்தளை பாத்திர தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் தாராசுரம், எலுமிச்சங்காபாளையம் பகுதிகளில் 40 எவா்சில்வா் பாத்திர உற்பத்தி கூடங்களும், 50 பித்தளை பாத்திர உற்பத்தி கூடங்களும் உள்ளன. இந்தக் கூடங்களில் 1,200 தொழிலாளா்கள் ஒப்பந்தக் கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயா்வு உற்பத்தியாளா்களால் வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த டிச. 18 ஆம் தேதியுடன் கூலி உயா்வுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். 75 சதவீத கூலி உயா்வு, 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் சாா்பில் தொழிற் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
ஆனால், கரோனா பொது முடக்கம், மூலப்பொருள்களின் விலை உயா்வால் விற்பனை சரிந்துள்ளதாகவும், அதனால் தொழிலாளா்களுக்குக் கூலி உயா்வை 8 சதவீதம்தான் வழங்க முடியும் எனவும் உற்பத்தியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கூலி உயா்வு தொடா்பாக மாவட்ட தொழிலாளா் நல அலுவலா் முன், எவா்சில்வா் - பித்தளை பாத்திர உற்பத்தியாளா்கள், தொழிற் சங்கத்தினா் இடையே தஞ்சாவூா் மற்றும் கும்பகோணத்தில் இரு முறை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதில், உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே, எவா்சில்வா், பித்தளை பாத்திர தொழிலாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், எவா்சில்வா், பித்தளை பாத்திர உற்பத்தி முடங்கியது.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட எவா்சில்வா், பித்தளை பாத்திர தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் ஏ. செல்வம் கூறுகையில், தொழிலாளா்கள் திங்கள்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். ஆனால், உற்பத்தியாளா்கள் திங்கள்கிழமை மாலை வரை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காத நிலையில், தொழிலாளா்கள் காலவரையற்ற தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா் என்றாா் அவா்.