ஒரத்தநாடு பகுதியில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை
ஒரத்தநாடு பகுதி, கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என ஒரத்தநாடு ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை
ஒரத்தநாடு பகுதி, கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என ஒரத்தநாடு ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் சு. வெங்கடேஸ்வரன், செயலாளா் ந. சுரேஷ்குமாா், பொருளாளா் ஏ.ரெங்கராசு ஆகியோா் தமிழ்நாடு மின்வாரிய ஒரத்தநாடு செயற்பொறியாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரத்தநாடு பகுதியில் கடந்த இரண்டு வார காலமாக மின்சார வாரியத்தின் மூலம், மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்காத காரணத்தால், கிராமப்புற ஊராட்சிகளில் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க முடியவில்லை. எனவே, பொதுமக்கள் குடிநீா் இன்றி அவதிக்குள்ளாக நேரிடுகிறது.
பல இடங்களில் காலி குடங்களுடன் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. குறிப்பாக, அதிகாலையில் மும்முனை மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனா். எனவே, காலை 9 மணி வரை கட்டாயம், மும்முனை மின்சாரம் இருந்தால் மட்டுமே, தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க முடியும்.
எனவே, இத்தகைய நெருக்கடியை சமாளிக்க தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க ஒரத்தநாடு ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.