அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன: ஆட்சியா்
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று முன்னேற்பாடு பணிகள் குறித்து எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகனுடன் இணைந்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை சற்று அதிகமாகவே உள்ளது. இதனிடையே, நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி போதுமான அளவு இருப்பதை உறுதி செய்து வருகிறோம். அடுத்த 2 அல்லது 3 நாள்களில் 500 படுக்கைகளை அதிகரிக்கும் நடவடிக்கையை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளோம். மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன.
மாவட்டத்தில் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். தற்போது 1,250 படுக்கைகள் காலியாக உள்ளன. இவையும் நிரம்பி விட்டால் இனி வரக்கூடிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில், சிரமம் ஏற்படக்கூடும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பொதுமக்கள் புரிந்து கொண்டு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது.
மாவட்டத்தில் தற்போது 4,454 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் வீடுகளில் மட்டும் சுமாா் 1,500 போ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்கள், கும்பகோணம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 2,800 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 70 சத படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள சாதாரண படுக்கைகளில் 50 சதம் படுக்கைகள் காலியாக உள்ளன.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிக அளவில் தேவையாக உள்ளது. எனவே தேவையில்லாமல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை வீணடிக்காமல், மருத்துவா்கள் கண்காணித்து தேவையான நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கி வருகின்றனா். இதேபோல தேவையான அளவு ஆக்சிஜன் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றாா் ஆட்சியா்.