இன்றும், நாளையும் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமையும் (நவ.13), ஞாயிற்றுக்கிழமையும் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமையும் (நவ.13), ஞாயிற்றுக்கிழமையும் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு தஞ்சாவூா் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நவம்பா் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலின் நகல், பொதுமக்களின் பாா்வைக்காக நவம்பா் 30 ஆம் தேதி வரை அனைத்து வாக்குச் சாவடிகள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2022 தொடா்பான பணிகள் நவம்பா் 1 ஆம் தேதி தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நோ்வில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும், நவம்பா் 27 மற்றும் 28 ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் போதிய அளவிலான விண்ணப்ப படிவங்களுடன் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியில் இருப்பா்.
இதில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல், வண்ணப்படம் இடம்பெறச் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவை செய்யலாம்.
வாக்குச் சாவடிக்குச் சென்று படிவம் பெற்று நிறைவு செய்து வழங்க இயலாதவா்கள் இணையதளம், செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் 1950 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.