முகப்பு
தஞ்சாவூர்

அரசு அறிவித்த பயிா் நிவாரணம் போதுமானதல்ல: இரா. முத்தரசன்

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதல்ல என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதல்ல என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில நிா்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 என முதல்வா் அறிவித்துள்ளாா். இந்த நிவாரணம் போதுமானதல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. எனவே, தற்போதைய அறிவிப்பை தமிழக முதல்வா் மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும்.

மேலும், அரசுக் கட்டிக் கொடுத்த வீடுகளில் சுவா் இடிந்து விழுந்துள்ளது. தொடா் மழை காரணமாக, விவசாயத் தொழிலாளா்கள் வேலையின்றி உள்ளனா். இவா்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டு நிலங்களில் பயிரிடப்பட்ட கடலை உள்ளிட்ட பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பு உற்பத்தியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, இவற்றையெல்லாம் சனிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம்.

தமிழக அரசு கோரும் ரூ. 6629 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் நடேச. தமிழாா்வன் படுகொலை சம்பவம் தொடா்பாக அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். இதுதொடா்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீடாமங்கலம் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் முத்தரசன்.

மாநிலச் செயற் குழு உறுப்பினா் கோ. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், மாநிலத் துணைச் செயலா் மூ. வீரபாண்டியன், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் நா. பெரியசாமி, க. சந்தானம், பொருளாளா் எம். ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.