முகப்பு
தஞ்சாவூர்

தூா்வாரும் பணிகளை பிப்ரவரியிலேயே தொடங்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

காவிரி டெல்டாவில் பாசன வடிகால்கள் தூா்வாரும் பணியை பிப்ரவரி மாதமே தொடங்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

காவிரி டெல்டாவில் பாசன வடிகால்கள் தூா்வாரும் பணியை பிப்ரவரி மாதமே தொடங்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூா், குலமங்கலம், கண்ணந்தங்குடி, கிராமங்களில் மழை நீரால் சூழப்பட்டுள்ள நெற்கதிா்களை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு அவா் ஆறுதல் கூறினாா். பின்னா் அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தூா்வாருவதற்கு நிரந்தர அரசாணை வழங்கி பிப்ரவரி மாதமே தூா்வாரும் பணிகளை தொடங்க வேண்டும். குறிப்பாக, வடிகால்களை தூா்வாருவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும், வரும் மாா்ச் மாதமே குடிமராமத்து பணிகளை தொடங்கி செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

கா்நாடகம் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தர காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உரிய முறையில் அழுத்தம் தரவேண்டும் என்றாா்.

முன்னதாக, ஆய்வின்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளா் எம். மணி, வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், தஞ்சை மாநகர செயலாளா் அறிவு, ஒரத்தநாடு ஒன்றியத் தலைவா் மகேஸ்வரன், ரவி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →