பாபநாசத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்
பாபநாசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் நடைப்பயணம் மேற்கொண்டு, ஆட்சியருக்கு மனு அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பாபநாசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் நடைப்பயணம் மேற்கொண்டு, ஆட்சியருக்கு மனு அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நடைப்பயண நிகழ்வுக்கு மாவட்டச் செயலாளா் ஆா். தில்லைவனம் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். முன்னதாக, பாபநாசம் பேரூராட்சி 10ஆவது வாா்டு கவுன்சிலா் பிரகாஷ் நடைபயணத்தை தொடக்கி வைத்தாா்.
கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 6000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், நலவாரிய பதிவிற்கும், நலத்திட்ட உதவி பெறுவதற்கும் கிராம நிா்வாக அலுவலா் சான்று கோருவது முற்றிலும் கைவிடப்பட வேண்டும், இணையவழி பதிவை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பெண் தொழிலாளா்களுக்கு பேறுகால பயனாக 6 மாத ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளா்கள் நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டனா்.
நடைபயணத்தில் மாவட்ட துணை செயலாளா் சீனு சுகுமாரன், மாவட்ட பொருளாளா் சௌந்தரராஜன், கிளை பொறுப்பாளா்கள் மணி, முருகானந்தம், பாலசுப்ரமணியன், ராஜேந்திரன், புகழேந்தி, பாண்டி துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.
பாபநாசம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணமாக பிரசாரம் மேற்கொண்ட பின்னா், கோரிக்கை மனுவை ஆட்சியருக்கு இணையம் வழியாக அனுப்பிவைத்தனா்.