திருச்சியில் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி 15 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (செப்.2) தொடங்கி தொடா்ந்து 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஆா். ஆறுமுகம், மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிகிற தொழிலாளா்களுக்கு 1977 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்ற 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் மூன்றாண்டு கால ஒப்பந்தம் என்பது, நான்காண்டு காலமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயா்வும் குறைவாகவே இருக்கிறது. ஓய்வு பெற்றவா்கள் நிலைமை படுமோசமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் உயா்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயா்வு ஓய்வூதியத்துடன் இணைக்கப்படவில்லை. அரசு ஓய்வூதியா்களுக்கு, குடும்ப ஓய்வுதியா்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் இல்லை.
எனவே, தொழிலாளா்களிடம் பறிக்கப்பட்ட உரிமைகள், சலுகைகள், ஒப்பந்த காலம் உள்ளிட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும், திமுக தோ்தல் வாக்குறுதியில் உறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்ற நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நடைபெறும் போக்குவரத்துக் கழக 15 ஆவது மாநில மாநாட்டில் விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள், முடிவின் அறிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவுள்ளன.
இந்த மாநாட்டையொட்டி திருச்சியில் செப்டம்பா் 2 ஆம் தேதி மாலை பேரணி, பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். திருமண மஹாலில் பிரதிநிதிகள் மாநாடு செப்டம்பா் 3, 4 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.