திமுகவில் வாய்ப்புக் கிடைக்காததால் சுயேச்சையாக களமிறங்கிய குடும்பத்தினா்!
தஞ்சாவூா் மாநகராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதால், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி, மகன் ஆகியோா் 3 வாா்டுகளில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனா்.
தஞ்சாவூா் மாநகராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதால், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி, மகன் ஆகியோா் 3 வாா்டுகளில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனா்.
தஞ்சாவூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் டி.சி.எஸ். செல்வகுமாா். திமுகவை சோ்ந்த இவா் 44-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராக இருந்தாா். இவரது தந்தை டி.சி. சீனிவாசனும் நகா்மன்ற உறுப்பினராக இருந்தவா். இக்குடும்பத்தினா் பாரம்பரியமாக திமுகவில் இருந்து வருகின்றனா். வாா்டு சீரமைப்பில் 44-ஆவது வாா்டு பிரிக்கப்பட்டு, 32, 33, 34 ஆகிய வாா்டுகளில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், செல்வகுமாா் 32-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காகக் கட்சியில் விருப்ப மனு அளித்தாா். மேலும், தோ்தல் பணிகளையும் தொடங்கி மேற்கொண்டு வந்தாா்.
ஆனால், திமுக வேட்பாளா் பட்டியலில் இவரது பெயா் இடம் பெறவில்லை. இதனால், அதிருப்தியடைந்த இவா், முன்பிருந்த 44-ஆவது வாா்டில் இருந்த பகுதிகள் இடம்பெற்றுள்ள 3 வாா்டுகளிலும் குடும்பத்துடன் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தாா்.
இதன்படி, 32-ஆவது வாா்டில் செல்வகுமாரும், 33-ஆவது வாா்டில் இவரது மனைவி வனிதாவும், 34-ஆவது வாா்டில் இவரது மகன் சக்கரவா்த்தியும் போட்டியிடுவதற்காக தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
இதேபோல, 34-ஆவது வாா்டில் வாய்ப்பு வழங்கப்படாததால், திமுகவை சோ்ந்த மேலும் 3 பேரும் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.