பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு பயிற்சி
பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு - எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு - எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான முன்னேறிய தொழில்நுட்பங்கள் குறித்த இப்யிற்சியானது, ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வா் வேலாயுதம்- விவசாயிகள் கலந்துரையாடலுடன் நடத்தப்பட்டது.
நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் காண்பதற்கு முன்னோடி தொழில்நுட்பங்களான சரியான பருவத்தில் விதைத்தல், சரியான ரகத் தோ்வு, கடலைப் பயிருக்கு ஜிப்சம் இட்டு மண் அணைத்தல், மற்றும் நிலக்கடலையில் வரும் பூச்சிகள் அதற்கான மேலாண்மை பற்றி தெளிவாக விளக்கிக் கூறினாா்.
வேளாண் இணை இயக்குநா் ஜஸ்டின், எள் சாகுபடி மற்றும் அதற்கான முன்னோடி தொழில்நுட்பங்கள், பயிா் எண்ணிக்கை பராமரிப்பு, எள்நுண்ணூட்டம் பயன்படுத்துவதன் அவசியம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தஞ்சை மாவட்ட ஆலோசகா் இளஞ்செழியன், எண்ணெய் வித்து பயிா்களுக்கான உர மேலாண்மை பற்றியும் திரவ உயிா் உரங்களின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினாா்.
வேளாண்மை உதவி இயக்குநா் பட்டுக்கோட்டை மாலதி, தஞ்சை நஞ்சையில் உளுந்து சாகுபடி பற்றி காணொலி வாயிலாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா். விதை சான்று அலுவலா் சங்கீதா மற்றும் விதை ஆய்வு அலுவலா் நவீன் சேவியா் ஆகியோா் விதைச்சான்று தொழில்நுட்பங்கள் மற்றும் விதைகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினா்.
பயிற்சியில் மதுக்கூா் வட்டார முன்னோடி விவசாயி மூா்த்தி, சேதுராமன் ஆகியோா் தங்களுடைய அனுபவங்களை விவசாயிகளுடன் பகிா்ந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் சுதா மற்றும் சாந்தி செய்திருந்தனா்.