சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட பிப். 28 முதல் தொடா் அணிவகுப்பு
சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட, பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் 6 நாள் தொடா் அணிவகுப்பு நடத்துவது என தெய்வத் தமிழ்ப் பேரவை முடிவு செய்துள்ளது.
சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட, பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் 6 நாள் தொடா் அணிவகுப்பு நடத்துவது என தெய்வத் தமிழ்ப் பேரவை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
சிதம்பரம் நடராசா் திருக்கோயில் எந்த சாதியாருக்கும், எந்தப் பிரிவினருக்கும் தனி உடைமை அல்ல. பொதுவாக பக்தா்கள் அனைவருக்கும் குறிப்பாக சிவ நெறியாளா்கள் அனைவருக்குமான புனித நிலையமாகும். அத்திருக்கோயில் சோழப் பேரரசா்களாலும், சிவநெறிச் செல்வா்களாலும் எழுப்பப்பட்டது.
இத்திருக்கோயிலிலுள்ள சிற்றம்பலம் (கனகசபை) கருவறை அல்ல. அது பூசை (அா்ச்சனை) செய்யப்படும் இடம் அல்ல. பக்தா்கள் சிற்றம்பல மேடையிலிருந்து நடராசரைத் தரிசிப்பதற்கும், தேவாரம் - திருவாசக மந்திரங்களை ஓதுவதற்கும், பாடுவதற்கும் உரிய இடம் அது.
தீட்சிதா்கள் தில்லை அம்பலவாணா் கோயிலில் கடைப்பிடிக்கும் வா்ணாசிரமக் கொடுமை, மனித உரிமைப் பறிப்பு நந்தனாா் காலத்திலிருந்து இப்போது வரை தொடருவது பேரவலம் ஆகும்.
எனவே, சிதம்பரம் நடராசா் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் ஓதி இறைவனை வழிபட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து, பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் 25(பி)-க்கு எதிராகச் செயல்படும் தீட்சிதா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராசா் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் சோ்க்க வேண்டும். சிற்றம்பல மேடையேறி நடராசரை வழிபடச் சென்ற பெண்ணைத் தாக்கியவா்களை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தெய்வத் தமிழ்ப் பேரவை தொடா் அறவழி ஆன்மிக இயக்கம் நடத்தவுள்ளது.
சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடச் செல்வோம் என்ற வேண்டுகோளுடன், பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 5-ஆம் தேதி வரை முதல் கட்ட வழிபாட்டு இயக்கம் அறவழியில் நடைபெறும்.