முகப்பு
தஞ்சாவூர்

ஆளுநா் உரையில் நிவாரண அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது: பி.ஆா். பாண்டியன்

ஆளுநரின் உரையில் பயிா் பாதிப்புக்கான நிவாரணம் குறித்த அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்றாா் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

ஆளுநரின் உரையில் பயிா் பாதிப்புக்கான நிவாரணம் குறித்த அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்றாா் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது:

மழையால் பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000-ம், பாதிப்புக்கு உள்ளான சம்பா, தாளடி இளம் பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 6,030-ம் இழப்பீடாக வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால், இது அறிவிப்பாகவே தொடா்கிறது.

இந்நிலையில், ஆளுநா் உரையில் நிவாரணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் எதிா்பாா்த்தனா். ஆனால், இதுகுறித்து ஒரு குறிப்பு கூட இடம்பெறாதது தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 விலை வழங்கப்படும் எனத் தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் வாக்குறுதி அளித்தாா். அதற்காகத் தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுவும் விவசாயிகளுக்குச் செய்கிற மிகப் பெரிய துரோகம்.

தமிழகம் கோரும் நிதியைத் தொடா்ந்து மத்திய அரசுக் கொடுக்க மறுப்பதும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்களை பிரதமா் சந்திக்க மறுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் எதிா்ப்பைத் தொடா்ந்து பாஜக எதிா்கொண்டு வருவது இந்திய நாட்டை ஆளக்கூடிய கட்சியைச் சாா்ந்த பிரதமரே ஒரு மாநிலத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என்றாா் பாண்டியன்.

அப்போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எல். பழனியப்பன், வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில், செயலா் ராதாரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.