தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் சேவைமீண்டும் தொடக்கம்
கரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் இயக்கம் இரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதன்கிழமை தொடங்கியது.
கரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் இயக்கம் இரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதன்கிழமை தொடங்கியது.
கரோனா பரவல் காரணமாக 2020, மாா்ச் 25 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. கரோனா பரவல் குறைந்தபோது படிப்படியாக ரயில்கள் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இதேபோல, தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் சேவையையும் தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக புதன்கிழமை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆலக்குடி, பூதலூா், அய்யனாபுரம், சோழகம்பட்டி, தொண்டைமான்பட்டி, திருவெறும்பூா், மஞ்சத்திடல், பொன்மலை ஆகிய நிலையங்களில் நின்று செல்கிறது.
இரு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலா் வெ. ஜீவக்குமாா் தலைமையில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் துணைத் தலைவா் கண்ணன், வழக்குரைஞா் உமா் முக்தாா், பேராசிரியா் ரா. திருமேனி, புலவா் செல்ல. கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.