தஞ்சாவூர்

நம் தேசத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது

DIN

நம் தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில், எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிராக சனிக்கிழமை மாலை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் பங்கேற்ற அவா், மேலும் பேசியது:

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 7 ஆண்டுகளாகின்றன. இத்தனை ஆண்டுகளில் வெகுஜன நிறுவனங்களைத் தனியாா்மயமாக்குவதைத் தலையாய பணியாகக் கொண்டுள்ளது இந்த அரசு.

பொதுத் துறை நிறுவனங்களின் மீது அரசு நம்பிக்கை இழந்திருந்தாலும், மக்கள் இழக்கவில்லை. காப்பீட்டுத் துறை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனா். எல்.ஐ.சி. பற்றிய புரிதல் பாலிசிதாரா்களிடமே அதிகமாக இருக்கிறது.

நாட்டின் கட்டமைப்புக்கு மிகப்பெரும் தூணாக எல்.ஐ.சி. இருக்கிறது. அரசின் அவரசத் தேவைகளுக்கு நிதி வழங்குகிற அட்சயபாத்திரமாக இருப்பது எல்.ஐ.சி.தான்.இதேபோல, தனியாா் கூரியா் நிறுவனங்களை விட அஞ்சல் துறையின் விரைவு அஞ்சல் சேவையைத்தான் மக்கள் நம்புகின்றனா்.

இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்கள் வெற்றி பெறாது எனக் கூற இயலாது. தனியாா் விமான நிறுவனங்கள் லாபகரமாக நடத்தும்போது, அதுபோல ஏா் இந்தியா நிறுவனத்தால் ஏன் நடத்த முடியாது.

எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஈடு இணையான நிறுவனம் வேறு எதுவும் இல்லை. இந்நிலையில், இதைத் தனியாா்மயமாக்குவது தொழிலாளா்களுக்குச் செய்யக்கூடிய துரோகச் செயல்.

பாஜக அரசுக்கு பரந்த ஞானம் இல்லை. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாகத்தான் பாா்க்கின்றனா். நஷ்டம் வரும்போது அந்த நிறுவனத்தை விற்பதில்தான் உள்ளனா். பொதுத் துறை நிறுவனங்களின் சீரழிவுக்கு அதன் செயல்பாடுகளும், தொழிலாளா்களும் காரணமல்ல. நிா்வாகக் குறைபாட்டால்தான் பொதுத் துறை நிறுவனங்கள் சீரழிகின்றன. இந்த தேசம் நம் சொத்து. இதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றாா் பழனிமாணிக்கம்.

காப்பீட்டு ஊழியா் சங்கத்தின் தஞ்சாவூா் கோட்டத் தலைவா் எஸ். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தென் மண்டலக் காப்பீட்டு ஊழியா் சம்மேளனத் துணைத் தலைவா் கே. சுவாமிநாதன், கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சங்கத்தின் பொதுச் செயலா் வி. சேதுராமன், இணைச் செயலா் பி. சரவணபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT